அழிந்து கொண்டிருக்கும் தமிழனின் முகவரி
உன் அம்மா பெயர் என்ன ? என்று கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் என் அம்மா பெயர் ராக்காயி என் அப்பா பெயர் மூக்கன் என்று சொன்ன தமிழனின் மனம் இன்றைய நாகரிக வளர்ச்சியில் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுவதால் அந்தஸ்து (வெட்டி)கௌரவம் என்ற போர்வைக்குள் இருப்பதால் தன்னுடைய அம்மா, அப்பாவின் பெயர்களை சொல்ல வெட்கப்பட்டு நாகரிக பெயர்களை பெற்றோருக்கு சூட்டுகிறார்கள்.
இப்படிதான் தமிழன் என்று சொல்லவும் தமிழில் பேசவும் வெட்கபட்டுகொண்டு ஆங்கிலத்தில் பேசுவதை மதிப்பாக நினைத்துகொண்டு தன்னுடைய முகவரியை தொலைத்து முகத்தை மறைத்து ஆங்கில முகமூடியோடு வலம் வரும் தமிழனுக்கு ...
"பஸ்ஸில , டிக்கெட் வாங்கும் போது சேஞ்சாக் கொடுங்க "
" ஏய் ஆட்டோ ,ஒன் மினிட் ஸ்டாப் பண்ணு "
இப்படி எல்லா இடங்களிலும் அன்றாடம் தமிழரின் வாயில் தமிழுடன் கலந்த ஆங்கிலம் சரளமாகத் துள்ளி விளையாடுவது இயற்கையாகிபோனது .நல்ல தமிழில் பேசுபவர்களைக் காண்பது அரிதாகிப்போனது .ஆனால் பிரெஞ்சு நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவது ,எழுதுவதையே பெருமை எனக் கருதுகிறார்கள்,ரஷ்ய நாட்டு மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் .தமிழன் மட்டுமே தமிழில் பேசுவதை மட்டமாக கருதுகிறான் .தாயை மதிக்க தெரிந்தவன் மட்டுமே தலை வணங்க கூடியவனாக வலம் வருவான்.
ஞாயிறு போற்றுதும் ,திங்களைப் போற்றுதும், மாமழைப் போற்றுதும் என்று வாழ்ந்த நிலை மறந்து ,அகம் புறம் பாடி மகிழ்ந்த முன்னோர்களை மறந்து .தாய் மொழி மறந்து ஆங்கில மோகத்தில் ஆரிய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்ற நிலைதான் இன்றைய தமிழரின் எதார்த்தம் .
ஓர் இனமோ ,மொழியோ, எத்தனை பழைமையானதாக இருந்தாலும் ,சிறப்பானதாகவோ இருந்தாலும் ,தொடர்ந்து பேணிக் காக்கபடாவிட்டால் அறியாமையாலும் ,அற்பதனங்களாலும் ,ஆக்கிரமிப்புகளாலும் தான் யார் என்பதை அறியமுடியாத அடிமையாகிவிடும் ஆபத்தான சூழல் அமைந்துவிடும் .அப்படி ஒரு சூழலில் சிக்கி இருப்பது தமிழ் புத்தாண்டும் ,தமிழ் மாதங்களும் .இதுவரை சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும் மாதங்கள் தான் தமிழ் மாதங்களாக பின்பற்றுகிறார்கள் பெரும்பான்மையானவர்கள் ஆனால் இவை எப்படி தோன்றின என்பதற்கு ஒரு புராண கதை இருக்கு .
ஒரு நாள் கண்ணன் (கோகுலத்தில் கண்ணன் ) 60,000 பெண்களுடன் கொஞ்சி மகிழ்ந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கே சென்ற நாரதருக்கு பெண்கள் மீது ஆசை மலரவே " கண்ணா ,இது உனக்கே நியாயமாக இருக்கிறதா ? நீயே எல்லாப் பெண்களையும் சுற்றி வருகிறாய் எனக்கொரு பெண்ணை தரக்கூடாதா ? என்று கேட்டார் .அதற்க்கு கண்ணன் " சரி இந்த ஊரில் நான் இல்லாத வீட்டிற்குள் இருக்கின்ற பெண் உனக்கு " என்று கூறுகிறார் . நாரதரும் ஒவ்வொரு வீடாய் செல்ல எல்லா வீட்டிலும் கண்ணன் காட்சியளிக்கிறார் .வெறுத்துப்போன நாரதர் தானே ஒரு பெண்ணாக உரு மாறி கண்ணனுடன் 60 ஆண்டுகள் வாழ்கிறார் .
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழந்தை பிறக்க அந்தக் குழந்தைகள் பெயர்கள்தான் இன்றைக்கு தமிழ் ஆண்டுகள் எனப்படும் பிரபவ முதல் அட்சய வரை இருக்கும் 60 ஆண்டுகள் .
இந்த 60 ஆண்டுகளை உற்றுநோக்கினால் ஒரு பெயர் கூட தமிழ் இல்லை என்ற உண்மை புரியும். இவை அனைத்தும் நம் நாட்டில் வந்து குடியேறிய ஆரிய மொழிப் பெயர்கள் இவற்றிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொடர்பு இல்லை இவை இடையில் திணிக்கப்பட்ட பெயர்கள் .இந்த தவற்றை உணர்ந்த தமிழறிஞர்கள் 1921 - ஆம் ஆண்டு ஓன்று கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர் .தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாட முடிவெடுத்தனர் .இது நம்மில் பெரும்பான்மையானவருக்கு தெரியாது .
தமிழ் மாதங்கள் எவையென தெரிந்து கொள்ளுங்கள் .
தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - ஆடவை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை
தமிழ் மாதங்கள் சுறவத்தில் தொடங்கி சிலையில் நிறைவு பெறுகிறது "சித்திரையில் தொடக்கி பங்குனியில் முடியும் " மாதங்களை சொல்லி பழகிய நமக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடினம் தான் ஆனால் முடியாததல்ல .காரணம் தாய் மொழியல்லாத ஆங்கிலத்தை கற்று அதில் தேர்ச்சியாக பேச முடியும் நம்மால் தமிழையும் அதன் உண்மையான நிலையையும் கற்றுகொல்வதிலும் அதை செயல்படுத்துவதிலும் சிரமம் இருக்க போவதில்லை ஆகவே முயலுங்கள் இனியாவது முகவரியோடு அடுத்த தலை முறை இருக்க ஆவன செய்யுங்கள் .


No comments:
Post a Comment