Monday, December 30, 2013

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!


கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்

பறவை சப்திக்கும் நேரம்
கரிச்சான் குருவி 3.௦௦ மணி
செம்போத்து 3.30 மணி
குயில் 4.00 மணி
சேவல் 4.30 மணி
காகம் 5.00 மணி
மீன் கொத்தி 6.00 மணி

சங்கப்பாட்டில் 99 வகையான மலர்கள்:


பத்துப்பாட்டு தொகுப்பில் ஒரு பகுதி குறிஞ்சிப் பாட்டு ஆகும். இந்த நூல் கபிலரால் எழுதப்பட்டது. மேலும், இது காதலர்கள் மேற்கொள்ளும் நீண்டதூரப்பயணத்தை பற்றியதாகும்.

இந்நூலில் 99 வகையான மலர்களை பற்றிய குறிப்புகள் உண்டு. இந்த நூல் குறிஞ்சி பகுதியின் வளத்தை எடுத்துரைக்கும் என்றாலும், அனைத்து திணை மலர்களையும் சொல்கிறது. இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம். அந்த மலர்களின் பெயரை தந்துள்ளேன்.

(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இலமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு)

நன்றி!

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் 


அணுவின் அளவைச் சொல்லாத காலத்தின் போது தமிழன் நீட்டல் அளவை வாய்ப்பாடு சொல்லி வைத்துள்ளான்.

8 அணு – 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் – 1 பஞ்சிழை
8 பஞ்சிழை – 1 மயிர்
8 மயிர் – 1 கடுகு
8 கடுகு – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 நெல்
8 நெல் 1 பெருவிரல்
12 பெருவிரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 கோல்
500 கோல் – 1 கூப்பிடு
4 கூப்பிடு – 1 காதம்


கம்பன் காட்டும் எண்ணளவை இன்றைய கணிதவியலறிஞர்கள் இதனை அளவிட்டுரைக்க முடியாது என்கின்றனர். தமிழ் மொழி எண்களையும் வடமொழி எண்களையும் “பிங்கலந்தை” எனும் நிகண்டு நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம்
குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம்
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம்
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம்.

அறிவியலின் தாக்கம் தொடர்ந்து வரும் இலக்கிய பரிணாமத்தினூடே கலந்து வந்தன. மேலும் இது போன்ற எண்ணற்ற அறிவியற் செய்திகள் இலக்கியத்தில் நிறைய உள்ளன. இக்காலம் அறிவியல் எனும் பாற்கடலை அப்படியே அள்ளிக் குடித்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கு தமிழ் இலக்கியம் நிச்சயம் துணை நிற்கும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

அரசனின் மமதையைப் போக்கிய பெண் புலவரின் சாமர்த்தியம்!

அலை வீசும் கடலோரம் மக்கள் கடல் காற்றைச் சுவாசித்தவாறு ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். சிலர், கடலோரம் இங்கும் அங்குமாக நடக்கின்றனர். சிறுவர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

டுக்கடலில் ஆர்ப்பரித்து எழுந்த அலை, உருண்டு திரண்டு புரண்டெழுந்து கடலின் கரையைச் சலார்.... எனத் தொடுகிறது. கரையோரத்தில் உலாவியவர்களின் காற் பாதங்களை அலை நீர் நனைக்கிறது.

கடற் கரையோரத்திலே இருவர் எதையெதையோ சிந்தித்தவர்களாகச் செல்கிறார்கள். அவர்களிள் பாதங்களையும் கடலலை நனைக்கிறது. கடலோரம் காற்று வாங்கிச் செல்லும் இந்த இருவரில் ஒருவர் ஆண். மற்றவர் பெண். இருவரும் இளமையைத் தாண்டியவர்கள். திறமைகள் வாய்ந்த அனுபவசாலிகள். முதுமையின் எல்லைக்கு வந்திட்ட முக்கியஸ்தர்கள்.

பொழுதுபோக்கிற்காகக் கடலோரம் காற்று வாங்கிக்கொண்டிருக்கும் அந்த ஆண், ஓர் அரசன், அந்த அரசனுக்கு மனதிலே ஓர் ஏக்கம். எப்போதும் என் அரண்மனைக்கு வந்து, அரச சபையிலே தத்தம் புலமைகளைக் காட்டி பரிசில்கள் பெற்றுச் செல்கிறார்களே, இவர்களுக்கு மட்டுந்தானா புலமைகள் உள்ளன? எனது திறமையையும் காட்டி, ஒருவரையாவது மட்டந்தட்டி தன் புத்தி கூர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆதங்கப்பட்டான்.

அரசனின் இந்த எண்ணத்திற்கு ஏற்ற விதத்திலே வந்து வாய்த்தவர் ஒரு புலவர்; அதுவும் ஒரு பெண் புலவர். பெண் புலவர் என்றால், எல்லோரின் மனதிலும் முன் வந்து நிழலாகும். ஒரேயொரு பெண் புலவர் ஒளவையார்தான். ஆம், அந்த ஒளவையார்தான் இந்த அரசனுடன் சொல்லாட வந்து வாய்த்தார்.

அரசனும் ஒளவைப் புலவரும் கடற்கரையோரத்திலே உலாவிக்கொண்டிருக்கிறார்கள். கடலலை கரையில் மோதுகிறது. கரையோரம் காற்று வாங்கிய அரசனின் பாதத்தை மட்டுமல்ல ஒளவையாரின் பாதத்தையும் கடல் நீர் நனைத்து விடுகிறது.

இதுதான் சந்தர்ப்பம் என்று அரசன் நினைத்தான். ஒளவையாரை திக்கு முக்காடச் செய்யலாம் என்று எண்ணினான்.

தன் புலமையை வெளிப்படுத்த விரும்பினான். ‘நீர் வந்து காலில் விழலாமா’ என்று கேட்டு ஒளவைப் பிராட்டியாரைப் பார்க்கிறான். அவனுடைய முகத்திலே பரிகாசம் தென்படுகிறது. சிலேடையாகக் கேள்வி கேட்டுவிட்டேன். ஒளவையார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று பெருமிதத்தோடு அரசன் புன்னகைக்கிறான். நகைக்கிறான்.

ஒளவையாருக்கு பழைய ஞாபகம் வருகிறது. ஒரு தடவை ஒரு புலவன் ஒளவையாரைப் பார்த்து ‘ஒரு காலில் நாலிலைப் பந்தலடி’ என்றான்.

பந்தல் என்றால் நாலு தூண்கள் அல்லது ஐந்து தூண்கள் இருக்கும். ஆனால் புலவன் கண்டதோ, நாலு பந்தலுக்கு ஒரு தூண். அதனாலேயே அப்புலவன், ‘ஒரு காலில் நாலு இலைப் பந்தலடி’ என்றான்.

அது மட்டுமா? ‘அடி’ என்னும் சொல்லையும் சேர்த்ததால், ‘அடியே’(ய்) என்னும் கருத்தையும் கொடுத்தது.

வயல் வரம்பிலே நடந்து செல்கையில், ஒளவையாரை ‘அடி(யே)’ என்று கேட்ட புலவனை, ஒளவையார் என்ன விட்டு வைத்தாரா! இல்லையே! சூட்டோடு சூடாக ‘டா’ என்று பதில் சொன்னார். ‘ஆரையடா சொன்னாய்!’ என்றார்.

யாரை அடா சொன்னாய்? என்னைப் பார்த்தா ‘அடி(யே) என்று கேட்டாய் என்று இங்கு பொருளாகிறது. அதே நேரம், புலவனின் கேள்விக்கும் பதிலாகிறது. ஆரை என்னும் ஆரங் கீரை ஒரு தண்டிலேதான் காணப்படும். மேலே நாலு இலை இருக்கும்.

ஒரு தண்டு ஒரு காலாக இருக்க, மேலே உள்ள நாலு இலைகளும், நாலு பந்தலாக இருக்கிறது.

இந்த ஆரங் கீரையைத்தான் அடா சொன்னாய்? என்று விடை கூறினாள் ஒளவை மூதாட்டி. சிலேடையாகப் பதில் கூறி, அந்தப் புலவனை மடக்கிய ஒளவையாருக்கு இந்த அரசன் எம்மாத்திரம்? இந்த மன்னனையா மடக்க முடியாது என்று எண்ணியவளாக, ‘நீர் வந்து காலில் விழலாமா?’ என அரசன் கேட்ட கேள்விக்கு, ‘நீரே வந்து காலில் விழுந்தால், நான் என்ன செய்ய?’ என்று சொன்னாளே பார்க்கலாம்.

அரசன் மெளனித்து நின்றான்.

வரப்புயர:
-------------
பெண்கவி ஔவையார் மிகவும் மதிநுட்பம் மிக்கவர். தன்னலம் கருதாமல் சேவை செய்யக்கூடியவர். சோழர்கால அரசர்களுக்கு ஔவையாரை மிகவும் பிடிக்கும். அரசு விழாக்களில் பங்கேற்க எப்பொழுதும் ஔவையாருக்கு தனி அழைப்பு வந்துவிடும்.

குலோத்துங்க மன்னன் முடிசூட்டுவிழாவில் ஔவையாரும் பங்கேற்றார். பல அமைச்சர்களும், புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர். அப்பொழுது ஔவையார் மன்னனை வாழ்த்தி பாட எழுந்தார். மன்னரும், அவையோரும் ஔவையார் என்ன பாடப்போகிறார் என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொது ஔவையார் "வரப்புயர" எனச்சொல்லி விட்டு அமர்ந்துவிட்டார்.

இதனைகேட்ட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஔவையாரே எழுந்து இதற்கு பின் வருமாறு விளக்கம் கூறினார்.

"வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்"

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.

ஆனால் இப்பொழுது இருக்கும் விவாசாயிகளின் நிலைமையும், அராசாங்கத்தின் கொள்கையும் ஏமாற்றத்தையே தருகிறது. விவசாய பொருட்களுக்கு கட்டுபடியான விலை எந்த அரசும் நிர்ணயிக்கவில்லை. மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டதால் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் விவசாயம் நலிவடைந்து வருகிறது. விவசாயத்தின் நலிவடைந்த தன்மையும், விவசாயிகளின் கடன் தொல்லையும், விலைநில தொழிலுக்கும் அதன் அதிபர்களுக்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தான் ஊக்கத்தை தருகிறது.

புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை


ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன. பெரும் பொருளை அதற்காக அள்ளி இறைக்கின்றன. இராணுவம் பொருளாதாரம் விஞ்ஞானம் போன்ற அனைத்திலும் உலக அரசுகள் ஒன்றையொன்று வேவு பார்த்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. புலனாய்வுத் துறையின் தகவல்களை வைத்துத் தமது வெளியுறவுக் கொள்கைகளை செப்பனிட்டுக் கொள்கின்றன.

இத்தகைய புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே இன்றைக்கும் எதுவித மாற்றமின்றி உலகத்தால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன சொன்னவரைத் தெரியாமல்!

அரசாங்கம் ஒன்றுக்கு உலகத்தைப் பார்க்கும் கண்ணாக இருப்பது உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் கூற்றை மெய்ப்பிப்பது போல அண்மையில் தன்னால் தேடப்பட்ட ஒருவரை பாகிஸ்தானில் உளவுத் துறை என்ற கண்ணாலே பார்த்து நடவடிக்கை எடுத்தது அமெரிக்கா.

எல்லோருக்கும் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!.

புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவர்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள்.

"வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று."

இனி உளவு வேலைக்கு மதத் தலைவர்கள் போன்ற கோலம் தான் மிகவும் பொருத்தமானது என்பது வள்ளுவர் முடிபு. அவர்களால் தான் கடினமான இடங்களில் கூட இலகுவாக புக முடியும். இன்றைய உலகில் பல அரசுகளுக்கு மதபீடங்களும் மத குருக்களும் தான் உளவாளிகளாக இருக்கின்றமை வள்ளுவரின் அரசியல் தெளிவிற்கு சிறந்த சான்றாகும்.

"துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என்செயினும் சோர்வு இலது ஒற்று."

உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர்.

அது மட்டுமல்ல தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர்.

ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாது. அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர்.

ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது.

"ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்."

அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை ஆள்க என்றார் அவர்.

உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர்.

"சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை"

புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! எத்தனையோ அரசியல் சித்தாந்தங்களைப் படித்த நாம் வள்ளுவரின் ஒற்றாடலைப் படித்திருந்தால் பெருமளவு துன்பங்களைத் தவிர்த்திருக்கக் கூடும். என்ன செய்வது?

படித்ததில் பிடித்தது!
திருக்குறள் எழுதிய வண்ணம்
====================================

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் தன் குறளை எப்படி எழுதியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்ததுண்டா? படத்தைக் காணுங்கள். தலை சுற்றுகிறதா? காலந்தோறும் வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன் ஆகியோர்.

தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து காலத்தில் நம்முடைய தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும் என்பதைக் காணுங்கள். அப்படத்தில் உள்ள குறள் கீழே :-

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்கு மாறு.

ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
உள்ளம் உடைக்கும் படை.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலி னாங்கொன்று உடைத்து.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்


தகவல்: ஆசிரியர் பக்கம்

Sunday, December 29, 2013

தமிழரின் மறைந்த இசைக்கருவி

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது. அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்' 'பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது. ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.

சங்கத் தமிழன் சாகாவரம் வேண்டினானா?

 agathiyar
அறிவினில் உயரியத் தமிழ்மொழி என்பேன் நான்.
மொழி என்பது கருவியாகும். ஒருவனுடைய உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி வளர்வதற்கும், வளர்ந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்வதற்கும் பயன்படும் கருவியே மொழி என்பதாகும்.
அறிவினிலுயரியத் தமிழ்மொழி பேராழி 
ஊறிய அமிழ்தினும் சிறந்ததென்பேன்
பாரினில் உயரிய மகாகவியோடவன் தாசன் 
கூறிய உன்னதறிவுப் போற்றியே
தொன்று நிகழ்ந்தது அனைத்தும்
உணர்ந்திடு சூழ்கலைவாணர்களும் இவள்
என்றுப் பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்
ஆதி சிவன் பெற்றுவிட்டன என்னை என்று தமிழ் மொழியின் தொன்மையை மகாகவி பாரதி பாடிச் சென்றான்
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.
வாழும் மொழியான செம்மொழி மிகப் பழமையான மொழிகளுள் ஒன்றும்; அதன் சிரஞ்ஜீவித் தன்மைக்கு அதன் அறிவுச் செழுமையும்; உலகப் பொருள்களிலும்; படைப்பைப் பற்றிய அதன் தெளிவை ஐயம் திரிபுர விளக்கும் தன்மையையும்; கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந் நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அது முழுமை பெற்றதை; அதாவது முழு வளர்ச்சிப்  பெற்று விட்டதும், அதன் இலக்கண அமைப்பின் வழியே காணும் போது உலக மொழிகளில் வேறந்த மொழியிலும் இப்படி ஒரு இலக்கணம் அதுவும் பொருளிலக்கணம் எழுதப்படவில்லை என்னும் உயர்வும் இந்த அறிவினில் உயரிய அன்னை தமிழுக்கு உண்டு என்பது நமக்குப் பெருமையே.
இன்றைய நவீன அறிவியல் கூறும் அனைத்துப் பிரபஞ்சக் கூறுகளும் அதன் உருவாக்க அமைப்பின் முறையை முறையே முதல் கரு உரிப் பொருள்கள் வழியே முறைப் படுத்தி இருவரிகளில் பிரபஞ்சத்தை சுருக்கிய தொல்காப்பியச் செய்யுள் எத்தனைப் பெரிய சான்று இம்மொழி அறிவினில் உயர்ந்து முழுமைப் பெற்ற மொழி என்பதற்கு.
முதல்கருஉரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறை சிறந்தனவே…..
ஒரு வரிசையைத் தருகிறார், அதுவே இன்றைய அறிவியலும் கூறுகிறது.
இப்படிப் பொருளிலக்கணம் அதாவது வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்த மொழியின், அதன் அகம் புறம் என்னும் அன்றைய இலக்கியங்கள் இவற்றின்
முதல்கருஉரிப்பொருள் என்ற மூன்றே என்று  கூறிவிட்டு அடுத்த அடியில் ‘நுவலுங்காலை முறை சிறந்தன’ என்பது இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் வரிசை அதாவது படைப்பின் வரிசையை அதாவது நிலம்,பொழுது; அடுத்து கருப் பொருளான தாவரம்விலங்குகள் அதன் பின்பு பல்லாயிரம் வருடங்கள் கழித்து தான் மனிதன் தோன்றினான் என்பதாக. இதை இப்போது அறிவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.
தொல்காப்பிய இலக்கண நூல் எழுத்தது சொல் என்று மட்டும் அல்லாது மனித வாழ்விற்கு இலக்கணமும் கூறிய நூல். இது வேறெந்த உலக மொழியிலும் இல்லாத சிறப்பு என்பர்.
அதனால் அதனை நான் அறிவினில் உயரிய செம்மொழி என்பேன்.
சற்று உற்று நோக்கினால்…. இப்படியொரு உயரிய இலக்கணத்தை படைக்கும் போது, அது அற்றைய நாட்களில் தமிழன் வாழ்ந்த வாழ்வினையே விளக்கும் என்பதைக புரிந்துக் கொள்ளலாம்.
இருந்தும் அப்படியொரு வாழ்வு வாழும் போது, இப்படி இலக்கணம் படைபானானேன் என்று எண்ணினால், அது அந்த பண்பாட்டை ஒரு முழு ஒழுங்கு பெறாத பண்பாட்டை ஒரு முழு வடிவுக்கு கொண்டு வரவும், இன்னும் நுண்ணியதாக கூராக்கவும் எண்ணியே தொல்காப்பியர் செய்திருக்க வேண்டும்.
இல்லாத ஒன்றை; அறியாத ஒன்றை திடீரென ஒருவன் வரையறை செய்ய முடியுமா? என்பதும், அப்படி செய்வானாயின்; தமது வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஒன்றை புரிந்துக்கொண்டு  சாதாரண மக்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியுமா? என்பதையும் சிந்தித்தால்; அது அன்றைய தமிழனின் வாழ்வியல் அமைப்பு தான், அதை அவன் ஒருவாறு கைக் கொண்டிருந்தான் என்பது விளங்கும்.  இலக்கணம் பிறந்தது அப்போதே என்றால் அந்த இனம் எத்தனை நாகரிகமும், வாழ்வியல் விழுமங்களையும் பெற்றிருந்தது என்பதையும் இதன் வழி நன்கு அறியலாம்.
அகம் புறம் பிரிவு!
அகமும் புறமும் பற்றிய இலக்கியங்கள் இந்த இலக்கண அடிப்படையிலே தோன்றி தமிழ் மக்கள் வாழ்வின் முழுமையும் பறைசாற்றுகின்றன.
கவிஞன் ஞானோ காலக் கணிதம் என்பதைப் போல…
இலக்கியம் என்பது மண்ணின், மாந்தரின் அது தோன்றிய காலத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுவதே. அப்படியானால் அக்கால மக்களின் மனப் பாங்கை அது காட்டும் கண்ணாடி என்று தமிழ் சான்றோர் கூறுவதற்கு இணங்க; தமிழன் தனது உணர்ச்சியின் அடிப்படையில் எப்படிச் செயல் பட்டான்.
அதாவது, தனது மெய் சார்ந்த உணர்ச்சியில் அவனின் செயல் பாடு அவன் இந்த சமூகத்தில் மற்றோருடன் கொண்ட உறவு; குடும்பம், சமூகம் என்ற அமைப்பில் அவனது பங்கு என்பதும்; அவன் இந்த உலகை, பற்றிய எண்ணம், இயற்கையை பற்றிய கருத்து, புரிந்துணர்வு அதை அவன் கையாண்ட முறை ஆகிய அனைத்தையும் பற்றிய விழுப் பொருள்களை நமக்கு இன்று இந்த அகமும், புறமும் காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை,
அருமையான அகத்திலே ஏனிந்த அழுக்கு!
மக்கள் நுதலிய அகன் ஐந்திணை‘ (தொல் -அகத்திணை-57)
அனைவரும் அறிந்ததே ஐந்திணைகள்; குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம். இந்த ஐந்திணைகளிலே தமிழர் வாழ்வு அமைந்திருக்க வேண்டும் ஆனாலும் அதிலே வரும் மருதத் திணை இவர்களின் வாழ்வை நாசமாக்கி இருக்க வேண்டும்.
அதை நாமும் வள்ளுவரின் மறைவழியே அறிய முடியும். பரத்தையருடன் வாழும் வாழ்வை சித்தரிப்பது மருதம் ஆகும். இது சங்ககால தமிழனின் வாழ்வை சங்கருத்ததும்  ஆகும்.
பரத்தமை ஒழுக்கத்தை திருக்குறள் எப்படி எல்லாம் சாடியுள்ளது என்பதை யாவரும் அறிவோம்.
இருமனப் பெண்டிரும்கள்ளும்கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு  – (திருக்குறள் 920)
பொது மகளிர்த் தொடர்புகள்ளுன்னுதல்சூதாடுதல் இவைகள் கொண்டொழுகும் மனிதனை இலக்குமி கைவிட்டு விடுவாள். தரித்திரன் ஆகி விடுவான் என்பதே அது.
புறத்திலே புரையோடிய போரென்னும் போதை!

கொடுத்தல் எய்திய கொடாமை யானும்‘ (புறத்திணை – 7)
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்‘ (புறத்திணை-29)
இது சமூக ஏற்றத் தாழ்வை அந்நாளில் இருப்பதை நமக்குணர்த்தும்.
எல்லாவற்றிற்கும் மேலாக புறத்திலே அதிகம் பேசப் படுவது வீரம் பற்றியனவாகும் என்பதை நாம் யாவரும் அறிவோம். அது தொண்ணூறு விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள், ஆழ்ந்துப் பயின்ற தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்.
இந்த வீரத்தைப் புகழும் அதே வேளையில் அந்தப் போரினால் விளைந்த அவலனிலைகளைப் பற்றியும் அதுக் கூற தவற வில்லை.
காஞ்சித் திணையிலே காணக் கிடைக்கும் அவலம் எத்தனை கொடுமை என்பதை காண்பார் உணர்வார். கணவனை போரினிலே இழந்த மனைவியரின் அவலமும், தனது மகனை இழந்த தாயின் நிலையையும், சுற்றத்தாரும் உற்ற பெருந்துயரங்களும் சொல்லி இருப்பதையும் அறியலாம். அப்படி கூறிய அந்த காஞ்சித் திணை; போரிலே புகுந்து வீரம் காட்டுதலையே பெரிதும் விரும்பிப் போற்றின என்று தான் கூற வேண்டும்.
இதிலே பரத்தமையும்கள்ளும்சூதும் தவறெனக் கூறிய வள்ளுவன் கூட வீரத்தைப் பெரிதாகபுகழ்ந்துக் கூறினான்.
புறத்திணை குறிக்கும் கொடைவீரம் போக, வாகைத்திணையில் சான்றாண்மைநல்லொழுக்கம்,பிறர் பிழை பொறுக்கும் பண்புஅருளை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை துறவுகாமம் நீத்த சிறப்பு என்பவைகளையும் காணலாம்.
———————————————–
துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கட்டில் நீத்த பாலினானும்
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்
————————————————
அருளோடு புணர்ந்த அகற்சியானும்
காம நீத்தப் பாலினாலும். (தொல் -புறத்திணை-17)
ஆக போர், வெற்றிப் புகழ் என்பதிலே பெரிதும் மயங்கிக் கிடந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், அரசு கட்டிலைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டு துறவு மேற்கொண்டோழுகுவது பெரிய வெற்றி என்று வாழ்ந்தாரும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் இதற்கு நச்சினார்கினியர் உரை கூறுகிறார் ‘ வேதம் முதலிய வற்றாற் கட்டுதல் ஒழுக்கத்தோடு கூடியக் காட்சி’
வேதம் கூறிய படி ஐம்புலன்களையும் கட்டுதல் அது எப்படி சாத்தியமாம் அதற்கான ஒழுக்கத்தைக் கொண்டு கட்டு. அதாவது ஐம்புலன்களின் வழியே உந்தன் மனத்தை அழுக்காக்கிக் கொள்ளாது கட்டு. அப்படிக் கட்டும்கால்  காணும் காட்சி. ஆகதொல்காப்பியத்திலே இதையும் காண்கிறோம்.
ஒப்பு நோக்க மனித வாழ்வு என்பது இன்ப துன்பம் கலந்தது என்பது தான் ஆன்றோர் வாக்கும். ஐம்பூதங்களினால் ஆன அண்டம்; இந்த பிண்டமும் அப்படியே! அவைகள் ஒவ்வொன்று வேறு வேறானது ஒத்த தன்மைக் கொண்டு விளங்காது என்பதும் உண்மையே…
ஆகையால் வள்ளுவனார் கூறியது போல்…
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
தமிழ் மக்களின் வாழ்வுக் குறைகளை நீக்கினால், அந்தத் தமிழனின் வாழ்வு உலகிற்கு முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடை தமிழ்கூறு நல் உலகம். —(தொல் -பாயிரம்-1)
இது பழந்தமிழ் நாட்டின் பரப்பு என்பதை தொல்காப்பியம் வழி அறிகிறோம். இதை சேர, சோழப் பாண்டிய மூவேந்தர்களும்.. எண்ணிலா சிற்றரசர்களும் ஆண்டு வந்தனர் என்பது அறிந்ததே.
பக்காளிச் சண்டைகளை வீரம் என்பதா?
veeram
இம்மூன்று மன்னர்களும் ஓயாத, ஒழியாத போர்கள். இவர்கள் சில காலம் சும்மா இருப்பினும், இவர்களைத் தூண்டிவிட்டுப் போர் செய்ய செய்தவர்களும் உண்டு என்பர். போரிடா மன்னனே இல்லை. மேலும், சோழர்களுள் அரசு கட்டிலுக்காக நடந்த போர். ஏன்? தந்தை மகனுக்குமான போர்களும் இருந்தன என்பர்.
இப்படி மூவருள்ளும் சண்டை இட்டுக் கொள்வதால் வலியவன் வெல்வதும்; அதனால் தோற்றுப் போனவன் நாட்டில் சில பகுதிகளையும், விளைந்த விளைச்சல் மிகுந்த நிலங்களை கொழுத்துவதும், போரில் மடிந்த மனிதர்களின் குடும்பத் துயரத்தை பொருள் கொள்ளாது சர்வ சதாக் காலமும்… தமிழனுக்குள் தமிழன் அடித்துக் கொள்வதே இவர்களின் வேலையாகவும் இருந்திருகிறது.
வாழ்ந்தவன் ஒருத் தமிழன் என்றால் மடிந்தவனும் தமிழன் தான். சமுதாயத்தில் ஒரே வாழ்வியல் என்பதால் பொருளாதாரத்தைத் தவிர வேறு பெரிய மாற்றம் இருந்திருக்க மாட்டா.
 veeram2
இதிலே, கரிகாலன்பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுங்செழியன்சேரன் செங்குட்டுவன் பொன்றோர் ஆட்சிக் காலத்திலேயே தான் தமிழ்ப் பெருநிலம் ஒரு குடையின் கீழே இருந்திருப்பதாகவும் வரலாறு காட்டுகிறது.அதுவும் மிகக் குறுகிய காலமென்பர். எஞ்சியக் காலம் எல்லாம் போர் தான் அதுவும் பங்காளிச் சண்டை தான். இவர்கள் சும்மா இருந்தால், இவர்களின் கீழுள்ள சிற்றரசர்கள் அடித்துக் கொள்வார்ககளாம்.
போர் வெறி, எப்படி த் தமிழனை பிடித்து ஆட்டியது என்பதையும் அதை எப்படி தமிழினம் போற்றியது என்பதையும் புறம் நமக்கு காட்டி நம்மையும் உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டுத் தள்ளிவிடும் இந்த புறநானூற்றுப் பாடல்களை நான் வாசிக்கும் போதே. இன்னும் சொன்னால் புல் தடுக்கிப் பயில்வான்கள் கூட வீறுகொண்டு எழுந்து வாள் கொண்டு போரிடத் தூண்டும் உணர்விற்கு ஆளாக்கும் அந்த பாடல்கள் கூறும் காட்சிகள்.
முறத்தைக் கொண்டு பாயவந்தப் புலியை விரட்டி அடித்தாள் வீரமறத்தாய்  என்பதையும். புறமுதுகில் பட்டக் காயம் மார்பின் வழியே வந்துப் பாய்ந்தது என்பதை அறியாதத் தாய் தனது மகனுக்கு வீரப் பாலூட்டிய தனது முலைகளையே அறுத்து எறியத் துணிந்து பிறகு தெளிந்தக் காட்சிகள் எல்லாம் காணலாம்.
சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் இரு சகோதரர்கள். இருவரிடையே போர் மூண்டது. அதை கண்ட கோவூர் கிழார் என்ற சான்றோர் இருவரையும் அமைதி பெற இப்படிப் பாடுகிறார்.
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றேநின்னொடு
பொருவோன் கண்ணியம் ஆர்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினும்: தோற்பது நும்குடியே  -(புறம் 45)
அத்திமாலை தரித்த நீவீர் இருவரும் பொருதி யார் தோற்றாலும் அது சோழன் தோற்றான் என்பது தானே. விட்டு விடுங்கள் என்கிறார்.
வாடுகஇறைவ! நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ புகை எரித்தலானே   -(புறம்-6)
உனது தலையிலே நீ சூடிய வெற்றி வாகை மலர் உனது பகைவர் நாட்டை கொளுத்திய நெருப்பால் வாடுகிறதே. ஆக, இப்படி நெருப்பால் கொளுத்துவதும் தமிழனுக்குள் தமிழ் அடித்துக் கொள்வதும்.
அட, அப்பவே அப்படித் தானா! :)
மேலும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, காரிகிழார்  இப்படியும் பாடுவதாக குறிப்பர்.
பணியியர் அத்தைநின் குடையே -முனிவர்
மக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே.
நினது குடை, முனிவர் பெருமக்களுக்கும், சிவனுக்கும் அல்லாது வேறு யாருக்குப் பணியும் என்பதே. ஆக, புறநானூறில் பாடப் படுவதில் அறிஞர்கள் கூறுவது போல் தொண்ணூறு விழுக்காடு பெரும்பாலும் சகோதரப் போர்களைப் பற்றியதே இருக்கிறது.
இதன் பயனாக, ஆக்கப் பூர்வமான சமுதாய வளர்சிக் குன்றி இருந்தது என்று நினைப்பதில் தவறு ஏது?
இந்த அரசர்களுக்கு அறிவுரைகள் கூறுவோர் வெகு சிலராகவே இருந்திருக்கிறார்கள்.
மதுரைக் காஞ்சியிலே அவைகள் காணக் கிடப்பதை கூறும் அறிஞர் பெருமக்கள்.
அது ஓயாமல் போர் மூண்டு கொண்டிருக்கும் போது தலையானங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை விழித்துப் பாடப் பட்டமையைக் கூறுகிறது.
கோதையின் புனைந்த சேக்கை துஞ்சி – (ம.கா. 713)
முருகு இயன்றன்ன உருவினை ஆகி – (ம.கா. 724)
பூத்த சுற்றமொடு இயன்ற உருவினை ஆகி- (ம.கா.770)
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!
வரைந்து நீ பெற்ற நல ஊழியையே! – (ம.கா. 782)love
உண்டும், உற்றவளோடு மகிழ்ந்தும் களித்து, சுற்றமொடு வாழ்வாய்  என்கிறார் அவர். நல் விதி நயந்த வாழ்க்கை என்பதை குறிப்பிடுகிறார்.
ஆக, தமிழராக இருந்தாலும், தன்னாட்டையும், தம் மக்களையும் காக்க போரிடுவது வீரம். அது ஓர் சிறந்த அரசனின் கடமையும் கூட. பெரும்பாலும் அப்படி இல்லாமலும் வெத்துப் புகழுக்கும், நாட்டை பெரிதாக்கி பெருமைப் பட்டுக் கொள்ளவும் தமிழனுக்குள் தமிழனே அதிகம் அடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவு.
இதில் பெரும் கொடுமை தோல்வி யடைந்த நாட்டையும் விளைச்சல் நிலத்தையும் கொளுத்துவது தான்.
இப்படியாகிப் போன பண்டையத் தமிழனின் வாழ்வு பொருளாதார வீழ்ச்சிக்கே வித்திட்டிருக்குமே ஒழிய வேறென்ன.. வேறு பாதிப்புகள் என்ன என்பதை யூகித்தும் கொள்ளலாம்..
புலவர்களில் வெகு சிலரே இடித்துரைத்து கூறி மன்னர்களின் போக்கை மாற்ற முயன்று இருக்கிறார்கள் என்பதும் உண்மையே என்பதை இலக்கியப் பேராசிரியர்களின் ஆய்வு நூல்களில் காணமுடிகிறது.
தமிழுக்கு நோய்களானவை.
சங்கத் தமிழர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்திருந்தாலும்; அவர்களைச் சில நோய் கிருமிகள் தொற்றி இருந்ததை அறியாதும் இருந்தார்கள் என்பதை தமிழ்ப் பயின்ற சான்றோர் அறுதியிட்டு உரைப்பர்.
அவைகளாவன… பரத்தமை, கள்ளுண் ணுதல், அரசியலில் சகிப்புத் தன்மை இன்மை, அன்புடைமை இன்மை… மனித அன்பு அகங்காரத்தால் மறைந்திருந்தமை என்றும் கூறலாம்.
இப்படி தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒருவனை ஒருவன் வீழ்த்தியதால் என்ன மிஞ்சியது… திருடர்களாய் வந்தக் களப்பிரர்கள்; நாட்டில் புகுந்து கொள்ளை அடித்தார்கள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள், தமிழர் ஒன்று பட்டு எதிர்த்தாலும் அவர்களை அசைக்க முடியாமல் இருந்திருக்கிறது.
அன்பின் வழியது உயிர்நிலை என்பார் வள்ளுவனார்.  அறிவின் வழியது அதன் உயர்நிலை என்பேன் நான். அதையே, சங்ககாலத் தமிழரின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடும் போது; தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் தனது கம்பன் – புதியபார்வை என்ற நூலில் தெளிவுறு நடையினில் குறிப்பிடுகிறார். அதனின் சாரத்தை நானும் இங்கே குறிப்பிடுகிறேன்.
‘மனிதன் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கூட்டால் ஆனவன்; விலங்கிலிருந்து மனிதனை வேறு படுத்துவது அவன் பெற்றுள்ள அறிவே; மனிதப் பண்பு என்று எடுத்துக் கொண்டால் அன்பு, அருள் என்பனவற்றின் மேல்தான் அது நிலைத்து நிற்கின்றது. அதை யாரும் மறுக்க முடியாது.
அப்படிஎன்றால் அறிவின் பயன் என்ன? அவரே பதிலுரைக்கிறார். அன்பென்பது, தான் என்ற ஒன்றின் அடிப்படையில் பிறந்து, தனது குடும்பம் தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனக்குத் தொடர்புடையவர்கள் என்பவரின் மாட்டு விரிந்து செல்வது. இது அன்பின் இயல்பு. ஆனால், அவ்வாறு செய்கையில் தனக்குத் தொடர்புடையார் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகும் தன்மையைத் தானாக அது தருகிறது.
ஆனால், அறிவுடன் கலந்த அன்பானால்; அத்தவறுகளை இடித்துக் கூறி அது அன்புடையாரையும் திருத்த முயற்சிக்கும்.
மெய்ப் பொருள் காண்பதறிவு
தீது ஒரீஇ நன்றின்பால்உய்ப்பது அறிவு.
ஆக, இத்தகைய அறிவின் துணையை நாடாது, உணர்வை மட்டுமே கொண்டு ஒரு சமுதாயம் இயங்குமானால் அது முழுவாழ்வாகாது. அது சிறு காற்றிற்கும் தாக்குப் பிடிக்காது என்கிறார்.
மேலும் கூறுவார், பழந்தமிழ் வாழ்க்கையை எடுத்துக் கூறுவது இந்த இலக்கியங்கள் தாம். எந்த ஒரு இனத்தின் வாழ்வு முறையை அறிய உதவும் கருவி அந்த இனம் படைத்த இலக்கியமே.. இலக்கணம் அறியாதவர்களின் வாழ்வு ஒருபுடை வளர்சியுடையது. அதே போல் இப்பழந் தமிழரின் வாழ்க்கையில் உணர்வு பெற்றிருந்த இடத்தில், ஒரு மிகச் சிறு பங்கைக் கூட அறிவுப் பெற்று இருந்ததா? என்ற கேள்விக்கான சரியான விடையை இன்று கூட கூற முடியவில்லை. இத்துணை சிறந்த நாகரிகம், அந்த நாகரிகத்தின் கொழுந்து போன்ற வெளிப்பாடு தான் அவர்கள் ஆக்கிய இலக்கியம் என்கிறார்.
முத்தாய்ப்பாய் கூறுகிறார். அக வாழ்க்கையை அணுவணுவாய் ரசித்து ருசித்து இன்புற்று வாழ்ந்தத் தமிழன் இந்த அக, புற வாழ்க்கை இடையே நான் யார் என் உள்ளம் யார்?’ என்ற வினாவை அவன் கேட்டதாகவோ, அவ வினாக்கட்களுக்கு அவன் விடைத் தேட முயன்றதாகவோ அறிய வாய்ப்பில்லை.
இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார், புல், பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர்களுள் ஒருத் தொடர்பு உண்டு என்று ஒருக் குறிப்பால் உணர்த்தினரே ஒழிய, இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், தன பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அதற்கும் தனக்கும் உள்ளத் தொடர்புகள் பற்றியும் எந்த வினாவையும் எழுப்பினதாக அதற்கு விடை காண முயன்றதாக அவன் இலக்கியத்தில் இருந்து அறிய முடியவில்லை.
வடமொழியில் உபநிடதங்கள் தோன்றியக் காலத்தே சங்கப் பாடல்களும் தோன்றி இருக்க வேண்டும் அப்படி இருந்தும் அவற்றின் துணை கொண்டு மட்டும் ஆராயப் படவேண்டிய மேற்கூறிய வினாக்கள் எதையும் இவர்கள் எழுப்பியதாகக் கூறும் எந்த இலக்கியமும் இன்று இல்லை. தத்துவ ஆராய்ச்சியில் இவர்கள் ஈடுபட்டார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்து, ஏதேனும் நூல்கள் எழுதியிருந்தால் இன்று அவற்றில் ஓன்று கூட கிடைக்கவில்லை.
வாகைத் திணை
உணர்ச்சிக்கு அளவுமீறி இடங்கொடுத்து விட்டமையால் அறிவாராய்ச்சிக்கோ, தத்துவ விசாரணைக்கோ வாழ்வில் நேரம் கிடைக்கவில்லை என்றுத் தோன்றுகிறது. அன்றியும் தொல்காப்பியப் புறத்திணை இயல் 230 வரிகளில் அமைந்துள்ளது. புலனடக்கம் பற்றியும்துறவுப் பற்றியும்ஆசை நீக்கம் பற்றியும்,அருளைப் பெருக்கி கொள்ள வேண்டிய இன்றியமையாமையை பற்றியும் மொத்தமாக நான்கே வரிகள் தாம் உள்ளன என்றால், அற்றைநாள் தமிழர் இவைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும்.
இவ்வாறு கூறுவதால் புலனடக்கம், அருளுடைமை, துறவு என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த தமிழர்களே அந்நாளில் இல்லையென்று யாரும் நினைத்து விடக் கூடாது சிறிய அளவினரே தலைப் பட்டனர். அது வியப்புக்கு உரியதாக மற்றவர்களுக்குத் தோன்றி போற்றினர். ஆகவே தான், தொல்காப்பியம் இந்த நான்கையும் வாகைத் திணையினுள்  அடக்கிற்று போலும்.
வாகை என்றால் வெற்றிபுலனடக்கம்தன்னலத்தைத் துறத்தல் என்பவைதன்னையே வெற்றி கொள்வதாகும்… கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பவைப் பற்றித் தொல்காப்பியம் கூறுவதை அறிந்தாலும், அதன் பொருள் தெரியாததும்.. ஆன்ம விசாரணை இருந்ததா என்பதைப் பற்றி அறிய முடியாது என்று அருமையாக தெளிவுறக் கூறுகிறார்.’
எனது முந்தையப் பதிவில் வந்த எனதுக் கவிதையின் கருவிற்கு உயிரூட்டிச் செல்கிறார் இந்தப் பெருந்தகை.
உண்மையிலே சொல்கிறேன், எனதுக் கவிதையை எழுதும் போது;  இந்த கருத்தை நான் படித்திருக்க வில்லை. எனது கவிதை நான் இதுவரை வாசித்த சில நூல்களின் வாயில் பெற்ற அறிவின் மூலமாக எழுந்ததே. வேதாந்த கருத்துக்கள், அனுபூதிகளின் மெய்யுணர்வு விளக்கங்கள் என்று சிலவைகளும், மகாகவி பாரதியின் பாடல்களும் எனக்கு கொடுத்த முடிபே அது. அது சங்கத் தமிழில் காணவில்லை என்பதையும் அறிந்திருந்தேன்.
திருவாளர் சச்சிதானத்தம் ஐயா அவர்களின் பின்னூட்டத்தை வாசித்து எனக்குள் ஒரு சிறு பயம் கலந்த நெருடல் வந்தது… இன்னும் பெரிதும் ஆய்ந்து நோக்காமல்; அறிவினை உபயோகிக்காது உணர்ச்சி வசப் பட்டு எழுதி இருக்கிறேனோ என்று…. சற்று நேரத்தில் அந்த மன வருத்தம் என்னை விட்டு போக இந்த அறிஞர் ஆய்வுக் கருத்துகள் உதவின. எதேச்சையாக வீட்டில் இருந்த அந்த நூலில் இருக்கும் கருத்தைக் கண்டு மன நிம்மதியுற்றேன் அதை உடனே இங்கு பகிர்ந்துக் கொள்வது கடமையென உணர்ந்து எழுதுகிறேன்.
முதுபெரும் தமிழ்அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நமது நன்றிகள் உரியதாகட்டும்.
இங்கே மீண்டும் எனது கருத்துகளை ஓரிரு வரிகளில் கூறிக் கொள்கிறேன். ஒருவரிடமே இறைவன் அனைத்தையும் தந்துவிடுவதில்லை என்பது தான் பேருண்மை. மேலைநாட்டாரை விஞ்ஞானத்திற்கும் உலக மதங்கள் எல்லாம் தோன்றுவிக்க கீழைநாட்டாரை மெஞ்ஞானத்திற்கும் படைத்து போன்றும்.
சற்று ஆழ்ந்து யோசித்தால் ஓர் உண்மை விளங்கும்.
தமிழ் மொழியில் தமிழர் வாழ்வின் விழுமியப் பொருள்கள் என்பன இகலோகம் என்னும் இந்த புவியும் புவிசார்ந்த இயற்கையோடு வாழும் நெறிமுறைகளை; தமிழன் மாத்திரம் அல்ல மனிதனுக்கே உரியதாக; யாவரும் பின்பற்ற தக்கவாறு உயரியதாகச்  செய்திருப்பதைக் காணலாம்.
அதைப் போன்று… சமஸ்கிருதம் என்னும் வேதங்கள் பூத்த மொழி, தனிப்பட்ட யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாதது போலும்… பாரத பெருங்கண்ட மக்களாகிய மூதாதையர் தொடங்கி உலகமெல்லாம் பரவி இருக்கும் அனைத்து பாரதக் குழந்தைகளுக்கும் உரிமையானதும்; அதே நேரம் அது மனித குலத்துக்காக இறைவனால் உண்டாக்கப் பட்டது என்பதும் தெளிவு.
மனித வாழ்வியல் முறையை அறம் பொருள் இன்பம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு  தமிழரின் வாழ்விலக்கணம் உலக மானுடத்திற்கே காப்பியனாரால் தரப் பட்டுள்ளது.
அதைப் போல அடுத்த படியான நிலையாமையை குறித்தும் வீடுபேறு என்பதை நோக்கியும் பயணிக்க வேண்டும் என்பதை மட்டும் கூறி நம்மை காப்பியனார் தமிழின் இரட்டைப் பிறவியான வடமொழியினை நோக்கிச் செலுத்துவதாகவே நான் உணர்கிறேன்.
அதைத் தான் சங்க இலக்கியக் காலத்திற்குப் பின்பு வந்த வள்ளுவனாரும்… இளங்கோவும், கம்பனும் நமக்கு தங்களது காப்பியங்களின் வழியே பாதை அமைக்கிறார்கள் என்பது நடுநிலைமையுடன் உணர்ச்சிக்கு மாத்திரம் இடம் தராத அறிவுடையோர் யாவரும் ஏற்பர்.
அதோடு, அதற்கு பின்பு தோன்றிய  நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று நீளும் வரிசை… இந்த தமிழ் மகான்களின் ஆக்கங்கள் யாவும் தம்ழுக்கு சிறப்பு சேர்த்தாலும்; அதன் உள்ளே இருக்கும் ஒளி , இயக்கம் அது வேதங்கள் கூறும் கருத்துக்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. அப்படி மறுத்தால் அது வெறும் விகண்டவாதமேத் தவிர அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து.
‘அறிவினிலுயரிய தமிழும் வடமொழியும் சேர்ந்துப்
பயின்றவர் இவ்வுலகில் ஒளிபெற்று நிரந்தரமானார்
இவ்வறிவினை ஏற்றிடில் கலியும்மாலுமே!’
இந்த வரிகள் தாம் யான் குறிப்பிடும் வள்ளுவனும், இளங்கோவும், கம்பனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஒளிபெற்ற இறவாப் புகழ் பெற்ற ஆக்கங்களை தமிழுக்கு அளித்தனர். அவர்கள் ஆக்கங்கள் இன்னமும் ஒளிர்கின்றன. அப்படி பார்க்கையில் அவர்கள் ஒளிபெற்று நிரந்தரமானாவர்கள் என்னும் உண்மை நன்கு விளங்கும். இன்னும் சொன்னால் ஒளி பெற்றவர்களாலே இப்படி அழியாப் புகழுடைய காவியங்களைப் படைக்கவும் முடியும்.
ஆயிரமாண்டுகளாய் ஓங்கி உயர்ந்த தமிழரின் வாழ்வு தடமாறிப் போவதைத் தடுக்கவே தெய்வப் புலவர் அவதரித்தார் எனலாம்…. அதன் பின்னே அடியார் படைகள் அணிவகுத்தனவே… ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியில் திளைத்தாலும் ஒளிபெற்றது இறைவனின் அருளால் என்றாலும், நச்சினார்கினியர் கூறுவது போன்று ‘புலனடக்கத்தோடு கூடிய காட்சி’ என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த மகான்கள் எல்லாம் தமிழில் இறவாப் புகழ் உடைய அமரகவிகளை படைத்ததே அந்த ஒளியினில் திளைத்துக் கொண்டிருக்கையிலே தான் என்பதையும் அவைகள் வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது.
மெஞ்ஞானியாகட்டும், விஞ்ஞானியாகட்டும் இருவரும் தனது மனதின் ஆழ்நிலையில் அகக் கண்ணால் தான் யுகங்களுக்கும் நிலை பெற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.
அப்படிப் பார்க்கையிலே பன்மொழித் திறனாளர், வடமொழியில் பெரும் புலமைக் கொண்ட பேரறிஞர் காப்பியனார் எழுதிய இலக்கணம் ஆதிமுதல் இன்றுவரை அல்ல இன்னும் இந்த உலகம் இருக்கும் வரை மாறுதல் என்பதையே காணாத ஒருப் பொக்கிசமாக விளங்கும். அந்த ஒளி  பொருந்திய மகான் மேற்கூறியோருக்கு எல்லாம் மூத்தோரே.
எட்டயபுரக் குயில் அது என்ன கூவியது.
பாரதி நாம் ஒவ்வொருவரும் அமர நிலை பெறவேண்டும் அதற்கு முயல வேண்டும், தியானம் பயில வேண்டும் ஒளி பெறவேண்டும்; அதை இந்த உலகிற்கு நாமே சொல்லியும் கொடுக்கவேண்டும்; அப்படி உலகில் உள்ளவர்கள் யாவரும் அமர நிலைப் பெறுவார்களாயின் இந்தக் கொடும் கலி வீழும். என்பது, பாரதி நமக்குச் சொல்லிச் சென்றுள்ளான்….
இவைகள் எல்லாம் உபநிடதங்கள் வழியே; தமிழ் மொழி பெரிதும் பெற்று இருக்கிறது. அதைத் தமிழர் கைக்கொள்ளவேண்டும் என்பதே தெய்வப் புலவர் தொடங்கியோர் கூறியது. அதைச் செய்வோம்.. அதோடு அந்த உபநிடதங்கள் படைக்கப்பட்ட மொழியும் நமக்கும் சொந்தம் அது நமது தந்தையர் மொழி என்னும் உரிமையையும் உறுதி செய்வோம்.
சரி, வாழ்வாங்கு வாழவும், வீடுபேறு பெறவும் வழி கூறிச் சென்றத் தமிழனின் தொடர்ச்சியில் மேற்கூறிய அத்தனையையும்; தானும் பயின்று அதையே நமக்கும் பகன்று; இன்னும் இந்த உலகும் வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்; என்பதை எட்டயபுரத் தமிழன் அந்த மகாகவி பாரதி அத்துனை அழகாகச் சொல்லிச் சென்றுள்ளான்.
பாரதியின் புதியதோர் வேண்டுகோள்
கடைசியாக மகாகவி பாரதி இன்னும் ஒரு புதிய வேண்டுகோளையும் வைக்கிறான்.
“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச”
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாப் புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
————————————————-
சென் றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
அவனது வேண்டுகோளை அனைவரும் ஏற்போம். நம்மால் இயன்றதை இந்த அமரத்தன்மை வாய்ந்த தமிழுக்குச் செய்வோம்.
தெய்வ நம்பிக்கையும், மறுபிறவிக் கொள்கையும் இருக்குமானால் இது போன்ற மாச்சரியங்கள் வரவேக் கூடாது.
யார் கண்டார் முற்பிறவியிலே நாம் எதை அந்நிய மொழி என்றும் அந்நிய சமூகம் என்றும்  நினைத்து வெறுப்புறு கிறோமோ, ஒதுக்குகிறோமோ அந்த மொழிக்கும், அந்த சமூகத்திற்கும் அயராது பாடுபட்டு இந்நிலைக்கு நாமும் அதை உயர்த்தியும் இருக்கலாம்.
இனமொழிப் பேதமில்லைத் தூயறிவினிற்கே – நற் 
குணமும் குற்றமும் உணர்த்தும் கல்விநமக்கே
மனமிருந்தால் மார்க்கமுண்டே’ மண்ணில் வாழ்வோருக்கே
மனமாச்சரியமொழிப்போம் மனிதநேயம் காப்பதற்கே!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்