
சங்கிலியன், யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னன். அண்மைய நாட்களில் புலம்பெயர்- உள்ளூர் தமிழ் ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட துரையப்பா, யாழ் மாநகர மேஜராக இருந்த (1974) காலப்பகுதியில் நல்லூரில் சங்கிலியனுக்கு சிலை வைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன. (இப்போதெல்லாம் 30 வருடங்களுக்கு முன்னர் நடந்தவையெல்லாம் வரலாறு என்றுதான் அறிக்கையிடப்படுகின்றன.)
யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் சங்கிலியன் சிலை யாழ் மாநகர சபையினால் அகற்றப்பட்டது. சிலை அகற்றப்பட்டதற்கான காரணமாக புதிய சிலை வடிவமைக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனாலும், அதனை பலரும் எதிர்த்ததுடன், சங்கிலியன் சிலையிலிருக்கிற வாளை அகற்றும் நோக்கிலேயே புதிய சிலை நிறுவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனாலும், நேற்று அதேயிடத்தில் மீண்டும் திறக்கப்பட்ட புதிய சிலையிலும் சங்கிலியன் வலது கையில் வாளேந்தியவாறே தோற்றம் தருகிறார். எனக்கு சங்கிலியன் வாளேந்தியிருப்பதும்- இல்லாமலிருப்பதும் பிரச்சினையே இல்லை. ஏனெனில், தமிழனின் வீரத்தையும்- போராட்ட உணர்வையும் ஒரு சிலரினால் தீர்மானித்து வடிவமைக்கப்படுகின்ற சிலை மட்டும் சொல்லிவிடுவதில்லை.
அதுதவிரவும், சங்கிலியன் மீது அவ்வளவு பெரிய அபிமானமும் எனக்கு இல்லை. இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் என்பது மட்டுமே சங்கிலியனின் புகழின் நீட்சிக்கான காரணமென்று நினைக்கிறேன். எனக்கு எல்லாளன் என்கிற மக்களின் உயிரின் மீது அக்கறைகொண்ட- போர் தர்மம் உணர்ந்த தமிழ் அரசனைத்தான் பிடிக்கிறது. 40 வருடங்கள் இலங்கையினை ஆட்சி செய்த பெருமையுள்ளன் எல்லாளன்.
70 வயதில் போரில் மக்களின் உயிர் அதிகளவில் பலிவாங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக எதிரி மன்னனான இளைஞன் துட்டகைமுனுவுடன் நேருக்கு நேராக மோதியவன். மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்காகவே தெரிந்து கொண்டு தோற்றவன். அவரின் வீரத்தையும்- மக்களின் அக்கறையையும் உணர்ந்து துட்டகைமுனுவே சிலை வைத்த வரலாறெல்லாம் உண்டு.
(இதனிடையே, வன்னியின் சிற்றரசனாக இருந்த பண்டாரவன்னியனின் சிலையொன்று அண்மையில் ‘நவீன துட்டகைமுனு’ என்று தன்னை வர்ணிக்கிறவர்களின் அடிப்பொடிகளினால் உடைக்கப்பட்டது என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த வகையில் துட்டகைமுனுவின், எதிரி மீதான வன்மம் போரியல் தர்மத்துக்குட்பட்டே இருந்திருக்கிறது. ஆனாலும், நவீன துட்டகைமுனுக்கள் பற்றி வீடியோக்கள் வெளியாகி கூறுவதை பார்க்க முடியவில்லை. இரத்தம் கொதிக்கிறது)
சங்கிலியனின் சிலையுடன் தமிழனின் வீரத்தை தொடர்புபடுத்தி பேசுகின்ற ஊடகங்களும், கட்டுரையாசிரியர்களும் வரலாற்றினை சிலவேளை மறந்துவிடுகின்றனர் என்று நினைக்கிறேன். ஏனெனில், சிங்களப் பெரும்பான்மைக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளராக இருந்த துரையப்பாவினாலே சங்கிலியன் சிலை நிறுவப்பட்டது. அது, தமிழ் தேசியக் கட்சியொன்றினால் நிறுவப்படவுமில்லை.
அப்படியிருக்கின்ற நிலையில், அதே சுதந்திரக் கட்சி தலைமை வகிக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழிருக்கிற யாழ் மாநகர சபையினாலேயே மீண்டும் சிலை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. ஆக, சங்கிலியன் சிலையை வைத்து அளவுக்குமீறிய அரசியலை செய்வதில் பலனொன்றும் இருக்கப்போவதில்லை. அதுதவிரவும், சங்கிலியன் சிலையை புதிதாக அமைத்துள்ளதன் மூலம் அரசாங்கத்துக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் மீது பாசமிருக்கின்றது என்று நினைப்பதும் தேவையற்றது. ஏனெனில், வேசம் போடுபவர்களின் நிறம் அடிக்கடி வெளுத்தே வந்திருக்கிறது.
வாளேந்தியிருந்தாலும்- இல்லாவிட்டாலும் சங்கிலியன் சிலை இருந்தாலும்- இல்லாவிட்டாலும் இலங்கையில் தமிழர்களின் வரலாற்று நீட்சியை அழித்துவிட முடியாது. ஆயினும், அழித்துவிட நினைப்பவர்களின் வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ் வரலாற்று நீட்சியை காப்பாற்ற எடுக்கப்படுகின்ற முயற்சிகள் மிகவும் குறைவானது என்பதே உண்மை. வெளிநாடுகளிலும்- ஊடகங்களிலும் மட்டும் தமிழ் வரலாற்று நீட்சியைப் பேசிக்கொண்டிருக்க முடியாது. அதற்கான ஆவணப்படுத்தல்களே அவசியமானது. அதனை செய்வதே முக்கியமானதும் கூட.
இதனிடையே, சங்கிலியனின் வழிவந்தவர்கள் என்று சொல்லுவதற்கு என்றைக்கும் நான் விரும்பியதில்லை. மக்களின் உயிர்களின் மீது அக்கறைகொண்டு, தன்னுயிரை மக்களுக்காகக் கொடுத்த உண்மையான தலைவன் எல்லாளனின் வழிவந்தவர்கள் என்று சொல்லுவதையே பெருமையாக கருதுகிறேன்! வரலாறுகள் அடிக்கடி திருத்தி எழுதப்பட்டே வந்திருக்கிறது. மற்றுமொரு எல்லாளன் மீண்டும் பிறந்து வருவான். நிச்சயமாக நம்புகிறேன்!!
No comments:
Post a Comment