Saturday, July 20, 2013

நாஞ்சில்நாட்டுத் தமிழனின் வீரம் கண்டு அஞ்சினர் வெள்ளையர்.


கப்பம் கட்டச் சொன்னான் ஆங்கிலேயன். ‘‘முடியாது’’ என்று எதிர்த்தான் தளவாய் வேலுத்தம்பி.அவனை அழிக்க படையெடுத்து வந்தனர் பரங்கியர். எதிர்த்தான். போரிட்டான். எதிரிகளை ஓடஓட விரட்டினான். அந்த நாஞ்சில்நாட்டுத் தமிழனின் வீரம் கண்டு அஞ்சினர் வெள்ளையர்.

எதிர்த்துப் போரிட துணிவின்றி,சதிவலை விரித்தனர்.காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்தார்கள்.கருங்காலிகள் காட்டிக் கொடுத்தனர்.அதனால் ஒரு மாவீரனின் சரித்திரம்,துன்பியல் சரித்திரமாகிப்போனது நம் துரதிர்ஷ்டம்தான்!

ஆம்! சுற்றிவளைத்துவிட்டார்கள் கோழைகள். தன்னிடம் தோற்றோடி-யவர்கள்; அவர்கள் கையிலா சிக்குவது? தமிழனின் மானம் தடுத்தது. தன் தம்பியை அழைத்தான். தன் வாளைக்கொடுத்து தன் தலையை வெட்டச் சொன்னான்.அண்ணன் தலையை தம்பி வெட்டினானா? அதற்குமுன் யார் இந்த வேலுத்தம்பி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள தாளக்குளம்தான் வேலுத்தம்பி பிறந்த வீர பூமி. குஞ்சு மயிற்றுப் பிள்ளை - வள்ளியம்மைக்கு 1765-ல் பிறந்த வீரக்குழந்தை அவர்.

மன்னர்களை மீறி திவான்கள் அதிகாரம் செலுத்திய காலம். திருவிதாங்கூர் மன்னராக இருந்த பலராம வர்மாவிடம் திவானாக இருந்தார் சங்கரன் நம்பூதிரி.

வேண்டுமென்றே அளவுக்கு அதிகமான வரிகளைப் போட்டு மக்களை துன்புறுத்தியவர்.ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்ட,மக்களை கொடுமைப்-படுத்தி வரி வசூலித்தவர்.மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.

இங்கிருந்துதான் உதயமானது வேலுத்தம்பியின் புரட்சி வரலாறு. ஆயுதம் தாங்கிய ஒரு படையைத் திரட்டி, மன்னருக்கு எதிராக கலகம் செய்தார். வேலுத்தம்பியின் எதிர்ப்பில் நியாயம் இருந்தது.அதனால் மன்னர் பணிந்தார்.உண்மையறிந்து நம்பூதிரியை நாடு கடத்தினார்.வேலுத்-தம்பியை திவானாக நியமித்தார்.

வேலுத்தம்பி ‘தளவாய்’ என்கிற பதவிக்கு வந்ததும், திருவிதாங்கூர் அரசின் வருமானம் குறைய ஊழலே காரணம் என்று கண்டுபிடித்தார்.

அதனை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டுவந்தார்.ஊழல் செய்தவர்களின் விரல்களையும் கைகளையும் வெட்டினார்.களவு செய்தவர்களின் கால்களை வெட்டினார். இதனால் ஊழல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. வேலுத்தம்பியின் தாயின் வீடு என்பதற்காக குறைத்து வீட்டுவரி வசூலித்த அரசு ஊழியரின் விரல்களைத் துண்டித்ததோடு,அதற்கு சம்மதித்த தன் தாயையே தண்டித்து பலரை அச்சம் கொள்ளச் செய்தவர் வேலுத்தம்பி.

இவரது இந்த ஊழல் ஒழிப்பை மக்கள் ஆதரித்தனர். ஆனால் அதிகாரிகள் எதிர்த்தனர். அவரை வீழ்த்த சதிவேலை நடந்தது. தங்கள் வஞ்சகத்தை வேலுத்தம்பிக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர்.அவரைப் பழிவாங்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர் ஊழல் அதிகாரிகள்.

இந்த சமயம், திருவிதாங்கூர் ஆட்சிக்கு பிரிட்டிஷார் வரி விதித்தனர். அதைக் கட்ட முடியாது என்று மறுத்துவிட்டார் வேலுத்தம்பி. கோபம் கொண்ட வெள்ளையர், கப்பத்தை இரட்டிப்பாக்கி எட்டு லட்சம் ரூபாயை அபராதமாக கட்ட நிர்ப்பந்தித்தனர்.அதுவுமில்லாமல் நாட்டின் வருமானத்தில் 80 சதவிகிதத்தை வரியாகக் கட்ட ஆணையிட்டனர்.

ஆரம்பத்தில் வேலுத்தம்பிக்கு உதவுவது போல் வந்த கர்னல் மெக்காலே என்ற வெள்ளை அதிகாரியின் நாடகம்தான் இவ்வளவும்.கப்பம் கட்டாவிட்டால் மன்னரையும் தளவாய் வேலுத்தம்பியையும் சிறைபிடிக்கப் போவதாக அச்சுறுத்தினான். தானே மன்னராக மெக்காலே நடக்க ஆரம்பித்துவிட்டான்.

அதை எதிர்த்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதப் புரட்சிக்குத் தயாரானார் வேலுத்தம்பி. அவரது புரட்சியைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் ஜமீன்தார்களும்கூட அஞ்சினர்.
வெள்ளையர் படை திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்தது.அவர்கள் நோக்கம் வேலுத்தம்பியைக் கொல்வது. இதை அறிந்த தளவாய் கொச்சியில் உள்ள பிரிட்டிஷ் கட்டடத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றினார்.

அரண்மனையில் மெக்காலேயைக் கொல்ல நெருங்கினார். அங்குள்ள அரண்மனை கழிவறைக்குள் ஒளிந்து, தப்பினான் மெக்காலே.இதனால் மெக்காலேவுக்கு வேலுத்தம்பி மேல் கோபம் அதிகமானது.அவரை உடனே கொல்ல உத்தரவிட்டான்.வேலுத்தம்பியைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசும்,பதவியும் தருவதாக தண்டோரா போட்டான்.

1806 டிசம்பர் 30 ஆம் தேதி ‘குண்டறை’ என்னும் ஊரில் மக்கள்முன் அவர் நிகழ்த்திய வீர உரை,மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக வீறுகொண்டு எழச் செய்தது. ‘குண்டறைப் பிரகடனம்’ என்ற புகழ்பெற்ற இந்த உரையைக் கேட்டு மக்கள் வெள்ளம் போருக்குத் தயாரானது. ஏறத்தாழ ஒரு வருடம் இடைவிடாது போரிட்டும் வேலுத்தம்பியை அடக்கமுடியவில்லை வெள்ளையரால்.இனியும் வேலுத்தம்பியை விட்டுவைத்தால், கிழக்கிந்திய கம்பெனியை முற்றிலும் அழித்துவிடுவார் என பயந்தனர். இதனால் மைசூரில் இருந்தும், சென்னையில் இருந்தும் 1809-ல் கர்னல் லோகர் என்ற கொடூர அதிகாரியின் தலைமையில் பெரும்படை கொண்டு வரப்பட்டது.

பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இதுவரை இல்லாத அளவு உபயோகப்படுத்தப்பட்டன. கர்னல் லோகர் உதயகிரி கோட்டையைக் கைப்பற்றி போரில் வெற்றி பெற்றதாக அறிவித்தான்.

கயவர்கள் காட்டிக் கொடுக்க, மண்ணடி என்ற ஊரிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் பதுங்கியிருந்த வேலுத்தம்பியை எதிரிகள் நெருங்கிவிட்டனர்.

ஆங்கிலேயரிடம் பிடிபட அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. எதிரியின் கையில் சாவதைவிட,தன் சகோதரனின் கையில் சாவதை வீரமாக நினைத்தார்.



தன் தம்பியிடம் தன் வாளைக் கொடுத்து தன் கழுத்தை வெட்டச் சொன்னார். சகோதரன் மறுத்துவிட்டான். வேறு வழி இல்லை. தன் கழுத்தைத்தானே வாளால் வெட்டி வீர மரணம் எய்தினார்.அப்போது அவருக்கு வயது 44.வீரமரணமடைந்த வேலுத்தம்பியின் உடலைத் தூக்கிப்போய் கழுவில் ஏற்றி, தங்கள் வெறியை தணித்துக்கொண்டனர் வெள்ளையர்.

தம்பியைக் கைது செய்து தூக்கிலிட்டனர். அவரது அரண்மனையை உழுது ஆமணக்கை விதைத்தனர்.அவரது குடும்பத்தார் பலரை அந்தமானுக்கு நாடு கடத்தினர்.தாய்நாட்டிற்காக வீரமரணமெய்திய வேலுத்தம்பியின் நாட்டுப் பற்றைப் பறைசாற்ற உள்ள ஒரே சாட்சி அவர் வாழ்ந்த வீடுதான். அவர் பயன்படுத்திய ஆயுதங்கள்,கலைப் பொருட்கள் இன்றைக்கும் அவரது வீரத்தைப் பாடிக் கொண்டு இருக்கின்றன.ஆனால் தமிழகஅரசு கண்டுகொள்ளாததால் அந்தவீடு பொலிவிழந்து கொண்டே வருகிறது. அரசு கவனிக்குமா?

No comments:

Post a Comment