Friday, July 26, 2013

இந்து மதமா? தமிழர் மதமா? தமிழர்களே சிந்திப்பீர் !


 ஆரியர்கள் வகுத்த இந்து மதத்தில் நால் வகை வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை இந்த நால் வகை வருணங்கள் நமக்கு இல்லையென்றாலும், பிற்காலத்தில் இந்த வருண பேதத்தால் தமிழர்களும் சாதிய வேறுபாடுகளால் துண்டாடப் பட்டனர் என்பது தான் உண்மை . பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது கொடுமை என்று தான் தமிழக பெருமக்கள் நமக்கு சங்க காலம் தொட்டே போதித்து வந்துள்ளனர். தொல்காப்பியர், வள்ளுவர், ஒளவையார் முதல் வள்ளலார் வரை இந்த வருணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தே வந்துள்ளனர். பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமம் என்றே போதித்து உள்ளனர்.

ஆனால் நயவஞ்சக ஆரிய இந்து மதமோ , பிறப்பாலே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கிறது . பிரமன் தலையில் இருந்து பிராமணன் பிறக்கிறான் , நெஞ்சுப் பகுதியில் இருந்து சத்திரியன் பிறக்கிறான், தொடைப் பகுதியில் இருந்து வைசியன் பிறக்கிறான், காலில் இருந்து சூத்திரன் பிறக்கிறான் என்று கதை கட்டி விட்டனர் ஆரியப் பிராமணர்கள். பிராமணனாக பிறந்த ஒருவன் கடைசி வரை பிராமணனாக தான் இருப்பான். சூத்திரன் சூத்திரனாகத் தான் இருப்பான். இது என்ன நியாயம்? தமிழர் மதமோ இவற்றை அடியோடு மறுக்கிறது . பிரமனையே மறுக்கிறது . அதனால் நமக்கு பிறப்பின் அடிப்படையில் உருவான சாதியை தமிழர் மதம் முற்றிலும் மறுக்கிறது . இதற்கு பல்வேறு சித்தர் நூல்கள் சான்றாக விளங்குகிறது.

இதனால் நாம் அறிய வேண்டியது தமிழர்களுக்கு தொழிலின் அடிப்படையில் தான் சாதி வேற்றுமை வந்துள்ளது அன்றி ஆரிய மதம் கூறுவது போல் பிறப்பின் அடிப்படையில் அல்ல. தொழில் மாற்றத் தக்கது ஆனால் பிறப்பு மாற்ற முடியாது. இனியும் தமிழர்கள் ஆரிய இந்து மதத்தின் மயக்கத்தில் இருக்காமல், தமிழர் பண்பாட்டை தழுவி சாதிய வேறுபாடுகளை களையுங்கள். பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்று உணருங்கள். அந்நிய ஆரிய மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தமிழருக்கு சாதி இல்லை என்பதை உணருங்கள். தமிழராய் இணையுங்கள்.

No comments:

Post a Comment